தஞ்சாவூர் வீரமாங்குடியில் வடக்குப் பார்த்த கோயிலில் எட்டுக் கரங்களுடன், அழகும் கருணையும் பொங்கக் காட்சி தருகிறாள் செல்லியம்மன். ஆடிமாதம் வந்துவிட்டாலே, வீரமாங்குடி செல்லியம்மனைத் தேடி வந்து தரிசிக்கின்றனர், பக்தர்கள். கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், மணலூர் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது வீரமாங்குடி. தஞ்சகாசுரன் எனும் அரக்கன், முனிவர்களையும் ஊர்மக்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க, கோடியம்மனாக அவதரித்தாள் அன்னை பராசக்தி. தனது ஆறு சகோதரிகளுடன் சென்று போரிட்டு, அசுரனை அழித்தொழித்தாள் தேவி! குறிப்பாக, கோடியம்மனுக்கு மிகப் பெரிய பலமாக இருந்து, அசுரனை அழித்தவள் இந்த செல்லியம்மன். ஆடி மாத அமாவாசை மற்றும் பவுர்ணமியில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு கால வேளையிலும் அம்மனைத் தரிசித்தால் கேட்டதெல்லாம் தருவாள்; குடும்பத்தில் ஒற்றுமையையும் சந்தோஷத்தையும் மேலோங்கச் செய்வாள். பக்தர்கள் அம்மனுக்கு கிடா வெட்டியும் பொங்கல் படையலிட்டும் வழிபடுகிறார்கள்.