நபிகள் நாயகம், ரமலான் மாதத்தை ஷஹ்ரே அஜீம் என்றும், ஷஹ்ரே முபாரக் என்றும் குறிப்பிட்டார். இதற்கு கண்ணியம் நிறைந்த அல்லது அருள் வளம் நிறைந்த மாதம் என்று பொருள். இந்த மாதத்தின் பெருமையை அளவிட வார்த்தைகள் இல்லை. இந்த மாதத்தில் நோன்பிருப்பவர்கள் அடையும் பலன் பற்றி நாயகம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்த மாதத்தின் எல்லா நாட்களுமே புனித நாட்கள் தான். எல்லா இரவுகளுமே புனிதமான இரவு தான் என்று குறிப்பிடுவோர் உண்டு. நமது தேவைகளை மறக்க பயிற்சியளிக்கும் மாதம் ரமலான். இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படியும் உணர்வை அளிப்பது இந்த புனிதமாதம். இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காக பசி தாங்கி இம்மாதத்தில் நோன்பிருக்கிறோம். பசியின் கொடுமையை உணர்ந்தால் தான், பிறர் பசி தீர்க்க முடியும் என்ற எண்ணத்தை அருளும் ஒப்பரிய மாதம் இது. ரமல் என்றால் கரித்தல். நம் பாவங்களை நோன்பிருந்து சுட்டுப் பொசுக்கும் நல்வாய்ப்பு மிக்க மாதம் இது. இந்த மாதத்தில் நோன்பிருப்பவரின் முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.