பதிவு செய்த நாள்
07
ஜூன்
2016
11:06
சங்கீத மும்மூர்த்திகளில் தனக்கென தனியிடம் பெற்றவர், தியாகராஜர். அவரது வாழ்க்கை மற்றும் கீர்த்தனைகளை, சுவையுடன் நாடக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், டிவி வரதராஜனின், யுனைடெட் விஷுவல்ஸ் நாடக குழு, ஸ்ரீதியாகராஜர் இசை நாடகத்தை பக்தியுடன் மேடையேற்றி உள்ளது. டிவி வரதராஜன் இயக்கி, தியாகராஜராகவும் நடித்துள்ளார். பிரபல கர்னாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ இசையமைத்து உள்ளார். சமூக நாடகங்களில் சென்டிமென்ட், காமெடியில் கலக்கிய, டிவி வரதராஜன், இந்த நாடகத்தில் நடிப்பு, நடை, உடை, பாவனைகளில் தியாகராஜராகவே வாழ்ந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதியில் சமாதி நிலை அடையும் காட்சி வரை, வரதராஜனின் எதார்த்தமான, அசத்தலான நடிப்பு, தியாகராஜரை கண் முன்னே நிறுத்துகிறது. நாடகத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், கைதட்டலை அள்ளுகின்றன. தியாகராஜரின் மனைவி கமலமாக ராஜ்ஸ்ரீ, மகள் சீதாவாக நதியா, சிஷ்யனாக ஸ்ரீதர், தியாகராஜரின் அண்ணனாக சுயம்பிரகாஷ், ராமபிரானாக சங்கர்குமார் ஆகியோர் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். தியாகராஜரின் அண்ணன் மனைவியாக வரும் லட்சுமியின் நடிப்பு அசத்தல். பக்தியை சொல்லும் நாடகம் என்றாலும் வசனமும், இசையும், காட்சி அமைப்பும் ரசிகர்களை கட்டிப் போடுகிறது. இந்த இசை நாடகம், இதுவரை, 35 முறை மேடையேற்றப்பட்டுள்ளது. 36வது முறையாக சென்னை, தி.நகரில் கிருஷ்ண கான சபாவில் நேற்று முன்தினம் நிகழ்த்தப்பட்ட போது, அரங்கில் உள்ள, 700 இருக்கைகளும் நிறைந்திருந்தன. அதற்கும் மேலாக, 500 பேர் நின்றபடி, நாடகத்தை ரசித்தனர்.