பதிவு செய்த நாள்
07
ஜூன்
2016
02:06
நம்பினார் கெடுவதில்லை என்று, நான்கு வேதங்களும் கூறுகின்றன. எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும். சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் வாழ்க்கை வரலாறு, இதற்கு உதாரணம். திருநாரையூரில், சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, பொள்ளாப்பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். பொள்ளா என்றால், உளியால் செதுக்கப்படாத எனப் பொருள். அதாவது, சுயம்பு - தானாகவே உருவானவர். அனந்தீசர் என்ற பக்தர், தினந்தோறும் பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை செய்து வந்தார். அப்போது, விநாயகருக்கு படைக்கும் நைவேத்யம் முழுவதையும் பக்தர்களுக்கு கொடுத்து விடுவது அவரது வழக்கம்.
வீட்டிலிருக்கும் அவரது மகன் சிறுவன் நம்பியாண்டார் நம்பி, அப்பா... தினமும் பிள்ளையாருக்கு நைவேத்யம் கொண்டு செல்கிறீர்களே... அவருக்கு படைத்த பிரசாதத்தை எனக்கும் தரக் கூடாதா? என்று கேட்பான். அனந்தீசரோ, மகனே... விநாயகர் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டார்... என சொல்லி விடுவார். ஒரு சமயம், தான் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார் அனந்தீசர். நம்பியும், விநாயகருக்கு நைவேத்யம் படைத்து. தந்தை கூறியபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் எனக் காத்திருந்தான்; ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்; ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால், சுவாமி சிலையின் மீது முட்டி, நைவேத்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழுதான், அவனுக்கு காட்சி தந்து, நைவேத்யத்தை எடுத்துக் கொண்டார் விநாயகர். பிரசாதத்துக்காக வெளியில் காத்திருந்த மக்கள், பிரசாதம் கேட்க, பிள்ளையார் சாப்பிட்டு விட்டதாக கூறினான் நம்பி. அவர்கள் அதை நம்பவில்லை. மறுநாள், மக்கள் முன்னிலையிலேயே, விநாயகரை சாப்பிட வைத்தான், நம்பி. விநாயகர் மீது, அவன் கொண்ட நம்பிக்கையும், பக்தியுமே இதற்கு காரணம். இதனால், நம்பியின் புகழ் பரவியது.
இந்த சமயத்தில் ராஜராஜ சோழன், தேவார பாடல்களை தொகுக்க முயற்சித்தார். அவருக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. விநாயகரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டார். நம்பி, விநாயகரிடம் முறையிட, அப்போது அசரீரி ஒலித்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமுறைகள் இருப்பதாகக் கூறியது. நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்றுக்குள் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தார் மன்னன். அவற்றை, 11 திருமுறைகளாகத் தொகுத்ததுடன், பொள்ளாப்பிள்ளையாரைப் போற்றி, விநாயகர் இரட்டை மணிமாலையை பாடினார், நம்பியாண்டார் நம்பி. இவருக்குரிய சன்னிதி, கோவிலுக்கு வெளியே உள்ளது. இவருக்கு வைகாசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் குருபூஜை நடைபெறும். அன்று இரவு முழுவதும் தேவார பதிகங்களை பாராயணம் செய்வர். இந்த விழாவை, திருமுறை விழா என்பர். இந்த ஆண்டில் தேவாரப் பாடல்களை பரப்பி வரும் சைவ பிரமுகர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிகமோ அல்லது பிற விஷயங்களோ எதுவாயினும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பியாண்டார் நம்பி போல வாழ்வில் வெற்றி பெறுவர்! சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் சாலையில், 17 கி.மீ., தூரத்தில், உள்ளது திருநாரையூர்.
அலைபேசி: 98420 73704.