பதிவு செய்த நாள்
10
ஜூன்
2016
12:06
பழநி: உலகநலன் மற்றும் மழைவேண்டி பழநி மலைக்கோயில், அதன் உபகோயில்களில் ஜூன் 19 முதல் 22 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் அன்னாபிஷேகவிழா நடைபெற உள்ளது. பழநி மலைக்கோயிலில் ஜூன் 19ல் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் சங்கு பூஜை நடக்கிறது. அதில் புனிதநதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் சங்குகளில் நிரப்பப்படும். தங்கச்சப்பரத்தில் கலசங்கள் வைத்து, சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடக்கிறது. உச்சிக்காலத்தில் மூலவருக்கு சங்காபிஷேகம் நடத்தப்பட்டு, மூலவருக்கு அன்னம் கிரீடமாக சூட்டப்படும். வில்வம் கலந்த சுத்த அன்னம் பாதங்களில் படைக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெறும். இதேபோல ஜூன் 20ல் திருஆவினன்குடி கோயிலில் மாலை 5.30 மணிக்கு மேல் (சாயரட்சையில்) அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 21ல் பெரியநாயகியம்மன் கோயிலில் சாயரட்சையில் பெரியநாயகியம்மன், சிவன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடக் கிறது. ஜூன் 22ல் சண்முக நதிக்கரையிலுள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடக்கிறது. சிவனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யபட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர் மேனகா செய்கின்றனர்.