பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
12:06
காரைக்குடி: காரைக்குடி அருகே இலுப்பக்குடி கோயில் அறங்காவலர் சுயம்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி நடவடிக்கை எடுத்துள்ளார்.இலுப்பக்குடியில் சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.கடந்த 2010 மே 20-ம் தேதி முதல் வீர.சுயம்பிரகாசம் என்பவர் அறங்காவலராக இருந்து வருகிறார். சிவகங்கை இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான குழுவினர் இக்கோயில் கணக்கு, தணிக்கை அறிக்கை மற்றும் அலுவலக கோப்புகளை பரிசீலித்தபோது, அசையா சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியும், தனிப்பட்ட நபர்களுக்கு பிரிவினை செய்யப்பட்டும், கூட்டு பட்டாவில் உள்ள நிலங்கள் மீட்கப்படாமலும், பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடாமல், தனிப்பட்ட முறையில் குத்தகை, வாடகைக்கு விடப்பட்டதால், கோயிலுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையரகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர.சண்முகமணி இந்து சமய அறக்கொடைகள் சட்டப்பிரிவு 53(4)-ன் படி 19 குற்றச்சாட்டுகளின் கீழ், அறங்காவலர் சுயம்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இடைக்கால ஏற்பாடாக கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செயல் அலுவலரை தக்காராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து கொப்புடையம்மன் கோயில் செயல் அலுவலர் செல்வியிடம் கேட்டபோது: ஆணையரின் உத்தரவுப்படி, பரம்பரை அறங்காவலர் வீர.சுயம்பிரகாசம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2-ம் தேதி முதல் இலுப்பக்குடி கோயில் செயல் அலுவலராகவும், 3-ம் தேதி முதல் தக்காராகவும் நான் பொறுப்பேற்றுள்ளேன். இது குறித்த அறிவிப்பு கோயில் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டுள்ளது, என்றார்.