பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
11:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ஸ்ரீ ராமர், ராவணனை சம்ஹாரம் செய்து முக்தி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தல வரலாற்றை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கிறது. நேற்று ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. திருக்கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர், லெட்சுமணர், அனுமான் ஆகியோருடன் தங்க பல்லாக்கில் புறப்பாடாகி, ராமேஸ்வரம் திட்டகுடி தெருவில் எழுந்தருளினர். பின், அங்கிருந்த இலங்கை மன்னர் ராவணன் உருவ பொம்மை மீது ஸ்ரீ ராமர் அம்பு எய்து சம்ஹாரம் செய்து, முக்தி அளிக்கும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினர். இதன் பின், ஸ்ரீ ராமருக்கு கோயில் குருக்கள் உதயகுமார் மகா தீபாரதனை நடத்தினார். இதில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.