பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
10:06
மடத்துக்குளம்: முன்னோர்கள் உருவாக்கிய கற்றளி கோவில்களும், கற்சிலைகளும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து, காலத்தை வென்று, தமிழர் திறனை உலகுக்கு கூறுகிறது.
கோவில்கள்: மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் எல்லைகளை வரையறை செய்யவும், மதத்தை வளர்க்கவும், அரசியல் பணிகளுக்காகவும், மன்னர் புகழ் நிலைத்து நிற்கவும் பல கோவில்கள் கட்டப்பட்டன. இந்த கோவில்கள் நீர்நிலைகளுக்கு அருகில் அல்லது நீர்நிலைகளின் கரைகளில் அமைக்கப் பட்டன. இந்த கோவில்களை அடிப்படையாக வைத்து, இதைச்சுற்றி கிராமங்கள் உருவாக்கப்பட்டன. இப்படி உருவான பலகோவில்கள், காலத்தை வென்று நிற்கும் விதமாக கருங்கற்களால் கட்டுமானம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட வகை பாறையை தேடி அதில் நல்ல தன்மையுள்ளதை உடைத்து கற்களாக்கி, அதை செம்மைபடுத்தி சதுரவடிவில் உருவாக்கி, சுவர்கள் கட்ட பயன்படுத்தினர். இந்த வகை கட்டடங்களுக்கு கற்றளி என பெயரிட்டனர். இந்தக்கற்களில் கோவில் கட்டுவதற்கு கருங்கல் திருப்பணி என அழைத்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும் கோவிலுக்குள் வெப்பம் தாக்காது, மழை காலத்தில் இதற்குள் குளிர் தாக்காது. இப்படி சிறப்பு மிக்க கற்றளிகள் மடத்துக்குளம் பகுதியில் பல இடங்களில் உள்ளன.
மடத்துக்குளமும் கற்றளியும்: மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் கரைப்பகுதியான காரத்தொழுவு, கடத்துார், கணியூர், சோழமாதேவி, உள்ளிட்ட பல ஊர்களில் சைவ, வைணவ ’கற்றளிகள் உள்ளன. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கற்றளிகள் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாகவும், உறுதியாகவும் கலைநயத்துடன் உள்ளன. விசாலாட்சிஅம்மன் உடனமர் காசிவிஸ்வநாதர் கோவில், இதில் குறிப்பிட தக்க ஒன்றாகும். தென்கொங்கு பகுதியில் மட்டும், 20க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்புகளை சோழர்கள் உருவாக்கியதாக கல்வெட்டுக்கள் குறிப்பி டுகின்றன. இப்படி உருவாக்கப்பட்ட குடியிருப்புகள், மங்கலங்கள் என அழைக்கப்பட்டன. மடத்துக்குளம் அருகே கொமரலிங்கம் அமராவதி ஆற்றின் கரையில் உருவாக்கப்பட்ட ஒரு ஊர் குமரங்க பீமச்சதுர்வேதி மங்கலம்ஆகும். இது பின்னாளில் (தற்போது) கொமரலிங்கம் ஆனது.
காசிவிஸ்வநாதர்: குமரங்க பீம சதுர்வேதி மங்கலத்தில் ஒரு சைவகோவிலை கற்றளி முறையில் அமைக்க திட்டமிட்ட சோழமன்னர், இங்குள்ள அமராவதி ஆற்றங்கரையை தேர்வு செய்தார். கோவிலுக்கு தனிசிறப்பு வேண்டும் என்பதற்காக, இதன் மூலவர் சிலை (லிங்கம்) மற்றும் அம்மன் சி லை, காசியில் உள்ள தச்சர்கள் மூலம் செதுக்கி, உருவாக்கி வழிபாடு செய்து, அங்கிருந்து எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டைசெய்யப்பட்டு கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் புதுப்பொலிவுடனும், உறுதியுடனும் இந்த கற்றளி கோவில் உள்ளது. காசியிலி ருந்து லிங்கம் எடுத்து வரப்பட்டதால் காசிவிசுவநாதர்கோவில் என அழைக்கப்படுகிறது.
சிலைகள் சொல்லும் சிறப்பு: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மிகவும் நாகரீகத்துடனும், வளமுடனும் வாழ்ந்தனர் என்பதற்கு சான்று போல இங்குள்ள சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. வேலைப்பாடுகள் அமைந்த வேட்டி, கைகால்களில் ஆபரணங்கள், முகச்சவரம் செய்யப்பட்டு சீராக வெட்டப்பட்ட தலைமுடி, தலையில் உருமால் எனப்படும் தலைப்பாகை, ஆரோக்கியமான உடல்கட்டு, வணக்கம் செலுத்துவதில் பாரம்பரியமான முறை, நெற்றியில் பொட்டு, வீரம் பேசும் முறுக்குமீசை என கம்பீரமாக உள்ள ஆண்சிலையும், முறையாக வாரிய தலைமுடி, கொண்டை அதில் வைக்கப்பட்டுள்ள பூக்கள், நாகரீகமான, அலங்காரமான மேலாடை, பழமையான எளிய முறையில் அணிந்துள்ள சேலை, அபிநயத்தோடு நிற்கும் பாங்கு, கைகளில் வளையல், கழுத்தில் நெக்லஸ் என கலை நயத்தோடு பெண்ணின் சிலையும், வளாகத்தில் உள்ளது. மனிதர்களை மாடலாக கொண்டுதான் சிலை செதுக்குவார்கள். இந்த சிலை அந்தகாலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாரம்பரியத்தையும், சிறப் பாக வாழ்ந்த விதத்தையும் கூறி, பல நுாற்றாண்டுகளாக கற்றளிக்குள் நிலைத்து நிற்கிறது.
பொதுமக்கள் கருத்து: மடத்துக்குளம் மக்கள் கூறுகையில், வரலாறுகள் கூறும் சிறப்பு மிக்க இந்த கோவில்களை பாதுகாக்க வேண்டும். இதன் சிறப் புகளை கோவில் வளாகத்தில் எழுதி வைப்பதோடு, கல்வெட்டுக்களை படியெடுத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இது போன்ற சி றப்பு மிக்க கோவில்களுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.