பதிவு செய்த நாள்
15
ஜூன்
2016
10:06
ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வரலாற்றை நினைவு கூறும் ராமலிங்க பிரதிஷ்டை விழா விமரிசையாக நடந்தது.ராமாயண வரலாற்றில், ராவணனை வதம் செய்த ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சிவபூஜை நடத்த முடிவு செய்தனர். அதற்கு சிவலிங்கம் எடுத்து வரும்படி சீதை, அனுமனிடம் கூறியதும், கைலாச மலைக்கு சென்ற அனுமன் திரும்பி வர தாமதமானது. இதனால் சீதை, ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சிவலிங்கம் வடிவமைத்து பூஜை செய்தனர்.அப்போது, சிவலிங்கத்துடன் வந்த அனுமன், சிவபூஜை முடிந்ததைக் கண்டு கோபமடைந்து, தனது வாலில் சீதை உருவாக்கிய லிங்கத்தை கட்டி இழுத்த போது வால் அறுந்தது. இதன் பின், அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்குத்தான் இனிமேல் முதல் பூஜை நடத்த வேண்டும், என ராமர் கூறியதும், அனுமன் சமாதானம் அடைந்தார். அதனால் தான், ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் முதலில் அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்தை(காசி விஸ்வநாதர் சன்னதி) தரிசித்து, பின் ராமநாதசுவாமியை தரிசனம் செய்கின்றனர். இத்தல வரலாற்றை நினைவு கூறும் விதமாக நேற்று, ராமேஸ்வரம் கோயிலில் குருக்கள் சந்தோஷ், அனுமன் வேடத்தில் பக்தி பரவசத்துடன் சிவலிங்கத்தை துாக்கி வந்து, பின் சிவ பூஜை செய்த நிகழ்ச்சி தத்ரூபமாக இருந்தது. இத்துடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது. விழாவில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.