ஊத்துக்கோட்டை: ஜாத்திரை விழாவில், மலர் அலங்காரத்தில் மாரியம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குறித்த நேரத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என, வேண்டிக்கொண்டு கிராமங்களில், மாரியம்மனுக்கு ஜாத்திரை விழா கொண்டாடப்படும். ஊத்துக்கோட்டையில், கடந்த, 12ம் தேதி, ஜாத்திரை விழாவை ஒட்டி, கிராம தேவதை செல்லியம்மன், அங்காளம்மன், எல்லையம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கிராமத்தில் உள்ள பெண்கள் பொங்கல் வைத்து, செல்லியம்மனுக்கு படைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் படையலிட்டு, ஆடு வெட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். நேற்று மாலை, பக்தர்கள் வேப்ப இலை ஆடை கட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பெண்கள் விளக்கேந்தி வழிபட்டனர்.