பதிவு செய்த நாள்
18
ஜூன்
2016
11:06
சென்னை: சென்னையில், சிலைகளை தேடி கோவில் நிர்வாகத்தினர் பலர் குவிந்தனர். ஒருவருக்கு மட்டும் சிலை கிடைக்க, மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை, ஆழ்வார்பேட்டை, ‘முர்ரேஸ் கேட்’ சாலையில் உள்ள வீடு மற்றும் வீனஸ் காலனியில் உள்ள வீடு மற்றும் குடோனில், சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாள், 83, பதுக்கி வைத்து இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. மேலும், போலீஸ் இணைய தளத்திலும், புகைப்படத்துடன் சி லைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, தமிழத்தின் பல பகுதிகளில் உள்ள கோவில்களின் செயல் அலுவலர், ஆய்வாளர், கோவில் தலைவர், பூசாரி, அர்ச்சகர் என பலரும் தீனதயாள் வீட்டில் குவிந்தனர்.
அவர்களில், கந்தசாமி என்ற பூசாரி, பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள, முத்தீஸ்வரர் சிவன் கோவிலில் திருடு போன, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நான்கு அடி உயரமுடைய பிரம்மன் சிலையை அடையாளம் காட்டினார். மற்றவர்கள், தாங்கள் தேடி வந்த சி லைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: போலீசார் பறிமுதல் செய்துள்ள சிலைகள், பெரும்பாலும் கோவிலில் இருந்து திருடப்பட்டவையே. கலை நயமுடைய, புராதன சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக புத்தர், விநாயகர் சிலைகள், கற்சங்கிலி விலை மதிப்பற்றவை. கோவில் சிலைகள் திருடு போனது பற்றி வெளியில் தெரிவித்தால் தங்களுக்கு பிரச்னை வந்து விடுமோ என, பலர் மூடி மறைத்து விட்டனர். இதனால், கோவில்களை அடையாளம் காண்பது சிரமம். எனினும், சிலைகளின் கலைத்தன்மை, தொல்லியல் ஆய்வு, அதன் வடிவமைப்பு வாயிலாக, எந்த மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்பதை கண்டறிந்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவில்களில் ஆய்வு: திருடப்பட்ட சிலைகள் குறித்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சேலம் மண்டல இணை கமிஷனர் மங்கையர்கரசி கூறியதாவது: சேலம் மண்டலத்தில், 4,000 கோவில்கள் உள்ளன. நாமக்கல், வரதராஜ பெருமாள் கோவில்; தர்மபுரி, சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்; ஓசூர், ஜலகண்டேஸ்வரர் ÷ காவிலில், சில ஆண்டுகளுக்கு முன், சிலைகள் காணாமல் போனதாக தெரிகிறது. அந்த கோவில்களில், அறநிலையத்துறையை சேர்ந்த அகிலன், முருகன், கோவிந்தராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அறிக்கை, சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது. இதுபோல், தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தீனதயாள் வீட்டில் இருக்கும் சிலைகள், சம்பந்தப்பட்ட கோவில்களை சேர்ந்தது என தெரிந்தால், உரிய நடவடிக்கைக்கு பின் மீட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.