பதிவு செய்த நாள்
20
ஜூன்
2016
10:06
காரைக்கால்:காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.சிவபெருமானால், அம்மையே என, அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது.
கடந்த, 17ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் மாங்கனி திருவிழா துவங்கியது. அன்று மாலை, பரமதத்தர், மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், காரைக்கால் அம்மையார் - பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, பிக் ஷாடண மூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 9:05 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம், வெட்டி வேர் தாங்கிய பிச்சாண்டவ மூர்த்தியாக எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.பிச்சாண்டவ மூர்த்திக்கு, மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து, பின் வீட்டு மாடிகளில் இருந்து, பக்தர்கள் மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது.