ராஜபாளையம்: ஆனி விழாவை முன்னிட்டு ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் நடந்தது. ஜூன் 11ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவின் ஏழாம்நாள் விழாவாக நேற்று முன் தினம் திருக்கல்யாணம் நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 9.40 மணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல். ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்தார். நிர்வாக அதிகாரி அறிவழகன் உட்பட பக்தர்கள் ‘நமசிவாய’ கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர். பெரியதேரில் மாயூரநாதசுவாமி, சிறியதேரில் அஞ்சல்நாயகி அம்மன் எழுந்தருளினர். சிறியதேரை பெண்பக்தர்கள் இழுத்தனர். சங்கரேஸ்வரன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார், ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் ரத வீதிகளை சுற்றி வந்த தேர், 10.15 மணிக்கு நிலையை அடைந்தது. இதன் பின் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையுடன் அன்னதானமும் நடந்தது.