குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2011 11:09
திருநெல்வேலி : நெல்லை அருகே குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் தேர்த்திருவிழா பக்தர்களின் "அரோ ஹரா கோஷம் விண்ணை முட்ட கோலாகலமாக நடந்தது. நெல்லை அருகே குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் தேர்திருவிழா கடந்த 2ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. கடந்த 8ம்தேதி உருக்குச் சட்டசேவை மற்றும் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் நெல்லைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. 9ம்தேதி சுவாமிவெள்ளைச் சாத்தி நான்முகன் காட்சியும், பச்சை சாத்தி திருமால் காட்சியும் நடந்தது. நேற்று காலை சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினர். இதனையடுத்து தேர் திருவிழா துவங்கியது. அப்போது பக்தர்களின் "அரோ ஹரா கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் நெல்லை நகரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு ஏழு வண்ணப்பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று(12ம்தேதி) மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு வெள்ளிமயில் வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது. நாளை(13ம்தேதி) இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதின நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.