இறைநெறி பற்றி அறிந்து கொள்வதும், அவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதும் மிகவும் அவசியம் என்கிறார் நபிகள் நாயகம். அவர் மக்கள் மத்தியில் பேசியதை இந்த ரமலான் நோன்பு காலத்தில் கேளுங்கள்.“சிலர் தம் அண்டை வீட்டாரிடம் இறைநெறி பற்றிய அறிவைத் தோற்றுவிப்பதில்லை. மேலும், இறை நெறியை அவர்களுக்கு கற்று தருவதும் இல்லை. இறைநெறி குறித்து அறியாமல் இருந்தால், ஏற்படக்கூடிய படிப்பினையூட்டும் விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு உணர்த்துவதில்லை. மேலும், அவர்களைத் தீய செயல்களை விட்டுத்தடுப்பதும் இல்லை. மேலும், ஏன் இவ்வாறு இருக்கிறது? சிலர் தம் அண்டை வீட்டாரிடமிருந்து இறைநெறி பற்றிய அறிவைப் பெறுவதும் இல்லை. இறைநெறியின்பால் உணர்வுகளை பெருக்கிக்கொள்வதும் இல்லை. இறைவன் மீது ஆணையாக! மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் இறைநெறியைக் கற்றுத்தர வேண்டும். இறைநெறியின் ஆழ்ந்த கருத்துக்களை அவர்களிடம் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு நல்லுபதேசம் செய்ய வேண்டும். நல்ல விஷயங்களை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தீயவற்றில் இருந்து அவர்களைத் தடுக்க வேண்டும். ஆக, மக்கள் அவசியம் தம் அண்டை வீட்டாரிடமிருந்து இறைநெறியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இறைநெறி பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய உபதேசங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல், விரைவில் அவர்களுக்கு நான் தண்டனை அளிப்பேன்,” என்றார்.இறைநெறி பற்றிய அறிவு இல்லாததால் தான், இன்று உலகத்தில் அநியாயங்கள் பெருத்து விட்டன. இறைவனைப் பற்றிய பயம் எள்ளளவும் மக்களிடம் இல்லை. இதற்கு, இறைவனைப் பற்றி விஷயமறிந்தவர்கள் ஒதுங்கிக் கொள்வது தான் காரணம். எனவே ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதும், வளரச் செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது.