பதிவு செய்த நாள்
02
ஜூலை
2016
05:07
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம், கடந்த 20 ஆண்டுகளாக ஏழை மாணவ- மாணவிகளுக்கு இலவச கல்வி போதனை வகுப்புகள் நடத்தி வருகிறது.
இந்த வகுப்புகள், நாள்தோறும் மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்று வருகின்றன. இதில் நான்காம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 500 ஏழை மாணவ-மாணவிகள் கல்வி கற்று பயனடைந்து வருகிறார்கள். இவர்களுக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள் அனைத்தையும், இலவசமாக வழங்கும்
நிகழ்ச்சி 1.7.2016-ஆம் நாள் நடைபெற்றது.
இந்த இலவசமாக வழங்கப்பட்ட நோட்டு புத்தகங்களின் மதிப்பு ரூ. 66,445. இந்த விழா சுவாமி கமலாத்மானந்தர் தலைமையில், சுவாமி முருகானந்தர் (தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண சேவாஸ்ரமம், திருப்பரங்குன்றம்), சுவாமி சுப்ரஜானந்தர் (ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை), ஆகியோர் கலந்துகொண்டு, மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கி ஆசியுரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்:
இறைவனிடம் ஏராளமான ஆற்றல் இருக்கிறது. அது மக்களுக்கு அனுக்கிரகம்
செய்கிறது. சாத்தானிடம் ஏராளமான ஆற்றல் இருக்கிறது. ஆனால் சாத்தானிடம் புனிதத்தன்மை மட்டும்தான் இல்லை. எனவே அது மக்களைப் பாழ்படுத்தி தீய வழியில் இழுத்துச் செல்கிறது. இறைவனிடம் இருக்கும் ஆற்றல்கள் போன்று இளைஞர்கள்- தங்களிடம் இருக்கும் ஆற்றலைத் தேசத்தின் நன்மைகளுக்குரிய ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும். இளைஞர்களிடமுள்ள ஆற்றல், இறைவனிடமுள்ள ஆற்றல் போன்று சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும்; ராக்ஷசனிடமுள்ள ஆற்றல் போன்று, சமுதாயத்தின் நலனுக்கு இடையூறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. நெருப்பைக் கொண்டு நல்ல சமையல் செய்து, பலருடன் பகிர்ந்து உண்ணலாம். அதே நெருப்பைக்கொண்டு, ஊரையே எரித்துவிடும் சமூகவிரோதிகளும் இருக்கிறார்கள். நெருப்பு போன்ற இளைஞர்களின் ஆற்றல், சமுதாய நலனுக்கு நன்மை செய்வதாகவே இருக்க வேண்டும்.
தற்காலக் கல்விமுறையில் அறிவு பெறப்படுகிறதே தவிர, ஒருக்கம் பெறப்படுவதில்லை. தற்காலக் கல்வி முறையில் திறமையும் ஒழுக்கமும் ஆன்மிகமும் பெறத்தக்க அம்சங்களையும் கட்டாயம் சேர்க்க வேண்டும். "வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளக் கூடிய திறமையையும், துணிவையும், இறைவனை உணரவும் உதவும் வகையில் கல்வி அமைய வேண்டும்- இது சுவாமி விவேகானந்தரின் கல்வி பற்றிய கருத்துக்களின் சாரம். தைத்திரிய உபநிஷதம், ""மாத்ரு தேவோ பவ (தாயைத் தெய்வமாகக் கருது), பித்ரு தேவோ பவ (தந்தையைத் தெய்வமாகக் கருது), ஆச்சார்ய தேவோ பவ (குருவைத் தெய்வமாகக் கருது) என்று கூறுகிறது. இவ்வாறு தனது சொற்பொழிவில் கூறினார்.