பதிவு செய்த நாள்
05
ஜூலை
2016
12:07
சென்னை: திருவண்ணாமலை கிரிவல பாதையில், மரங்கள் வெட்ட தடை விதித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சோனகிரி காடு பகுதியில், 12 கி.மீ., துார கிரிவல பாதையை அகலப்படுத்த மரங்கள் வெட்டப்படுவதாக, நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு, நீதிபதி பி. ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கிரிவல பாதையை அகலப்படுத்த, மரங்களின் கிளைகளை வெட்டவோ, வேரோடு வெட்டி அழிக்கவோ தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக, தமிழக தலைமை செயலர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், தமிழக வனத்துறையிடம் விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேலும், எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன; மரங்கள் வெட்ட அனுமதி கொடுத்தது யார் என்பது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணை, ஜூலை, 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.