பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
12:07
பேரூர் : ஆனி மாத நாற்று நடும் திருவிழா பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடந்தது. பேரூர் பட்டீசுவரர் கோவில், கோவை மாநகரிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், குறிப்பிட்ட நாளில் பேரூர் ஆண்டவர் மக்களுக்கு காட்சி தருவதை கொண்டாடும் வகையில், நாற்று நடும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சிக்குப்பின், சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று, சுந்தரருக்கு ஆண்டவன் காட்சி தரும் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்நாளில், பட்டீஸ்வரன் தங்கள் நிலங்களையும், பயிர்களையும் காப்பாற்றி, நல்ல விளைச்சலை தர வேண்டும் என்று வேண்டுவதற்காக, பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று நாற்று நடும் திருவிழா நடத்தினர். இதையடுத்து, சுவாமி திருவீதி உலா, சிறப்பு ஆராதனை மற்றும் அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் இவ்விழாவில் பங்கேற்றனர்.