மானாம்பதி: மானாம்பதியில் உள்ள பெரிய நாயகி சமேத வானசுந்தரேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதியில், 1,000 ஆண்டுகள் பழமையான வானசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவும், தை மாதத்தில் அப்பகுதியை சுற்றிலும் உள்ள பத்து கிராமத்தை சேர்ந்த சிவன் சுவாமிகள் ஒன்று கூடும், ஆற்று திருவிழா உற்சவமும் கோலாகலமாக நடக்கும். இக்கோவில் கட்டடம் கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்ததை அடுத்து, கோவிலை சீரமைக்க அப்பகுதிவாசிகள் தீர்மானித்து, 15 லட்சம் ரூபாய் செலவில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்தன. பணி முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில், இக்கோவிலுக்கான மகா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.