பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வடசேரி கிராமத்தில் ஆவுடையம்மாளாக அவதரித்த பார்வதிதேவியை, சிவன் தழுவி தன்னுடன் அழைத்துக் கொண்டதால், ’தழுவிய மகாதேவர் கோயில்’ என பெயர் பெற்றது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலின் தெற்கு வாசலில், 51 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. மூலவர், அனைத்து சன்னதிகளுக்கும் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டு, புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. கோயில் முன்பகுதியில் நந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஜூலை 6 காலை 6 மணிக்கு தொடங்கின. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜைகள் தொடங்கின. காலை 9.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. புதிய கொடி மரத்தில் பூஜைகள் நடத்தி கொடியேற்றப்பட்டது; அன்னதானம் வழங்கப்பட்டது.
’தினமலர்’ வெளியீட்டாளர் டாக்டர் ஆர். லட்சுமிபதி, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், விஜயகுமார் எம்.பி., இணை ஆணையர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ’தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தது, வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் தெரு. இப்பகுதியினர் மற்றும் பூசலார் நாயனார் சேவா சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, ’தினமலர்’ சார்பில் ரூ.20 லட்சத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறநிலையத்துறையுடன் இணைந்து, பூசலார் நாயனார் சேவாசங்க தலைவர் முத்தரசு, செயலர் வினோத்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்கள் சிவகுமார், சிவதாணுபிள்ளை, கவுரவ ஆலோசகர்கள் மகாதேவன், குமாரவேல், உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.