பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
பொன்னேரி: தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, அழகநாதர் பெருமாள் கோவில் திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மகா மண்டபம், கருடாழ்வார் சன்னிதிகளையும் புதுப்பிக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருத்தலம், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இத்திருத்தலத்தின் மூலவர் சன்னிதி மீதிருந்த சிறிய விமானம் இடிந்து உட்புறம் விழுந்தது. கோவிலில் இருந்த பெருமாள் சிலையும் சேதமடைந்தது. இதுகுறித்தான செய்தி வெளியானதை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கோவில் கட்டுமான பணிகள், கடந்த ஜனவரி மாதம் துவங்கின.
தற்போது, கோவிலின் கருவறை, அதன் மீது கோபுரம், அர்த்த மண்டபம் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் முடிந்து, வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட கோவிலின் நுழைவாயிலில் உள்ள, 24 கால் மகா மண்டபம், கருடாழ்வார் சன்னிதி, ஆஞ்ச நேயர் சன்னிதி ஆகியவை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இவற்றையும் புதுப்பிக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பணிகள் முடிந்து உள்ளன. மற்ற பணிகளுக்கு நிதி ஆதாரம் பெற்றுத்தான் செய்ய வேண்டும். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் என்றார்.
பாழடைந்து கிடக்கும் இந்த மகா மண்டபம், எப்போது வேண்டுமானாலும் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அருகில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி உள்ளன. மாணவர்கள், இங்குள்ள மண்டபத்தின் அருகில் வந்து விளையாடுகின்றனர். கருங்கற்களாலான இந்த மண்டபத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும். கிராமவாசி, கோளூர்
தினமலர் நாளிதழில் செய்தி வந்ததால் தான், பாழடைந்து கிடந்த இந்த கோவிலுக்கு விமோசனம் கிடைத்துள்ளது. தற்போது அதிகாரிகள், அரை குறை பணிகளுடன் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறுகின்றனர். கிராமத்தினர் மறுப்பு தெரிவித்து உள்ளோம். அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமவாசி, கோளூர்