பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
வேளச்சேரி: வேளச்சேரி, யோக நரசிம்மர் கோவில், குரோம்பேட்டை, வரசித்தி விநாயகர் கோவில்களில் நேற்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. வேளச்சேரி, தண்டீஸ்வரம் பகுதியில் உள்ள, யோக நரசிம்மர் திருக்கோவில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், சாலை மட்டத்தை விட, 4 அடி பள்ளத்தில் இருந்தது. கோவிலை புதுப்பிக்கும் திருப்பணிகள், 2008ல் துவங்கின. பழமை மாறாமல், கருங்கல்லால், கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபங்கள் அமைக்கப்பட்டன. எட்டு ஆண்டுகளாக நடந்த திருப்பணிகள் தற்போது முடிந்த நிலையில், நேற்று முன்தினம், யாகம் வளர்க்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டன. நேற்று காலை, கோ பூஜை, நித்ய பூஜை, மூல மந்திரங்கள், ஹோமங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து விமானம், ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரசித்தி விநாயகர் கோவில்குரோம்பேட்டை, நேரு நகரில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. அக்கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆறாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை, ஹோமங்கள் நடந்தன. காலை, 8:30 மணிக்கு மகா தீபாராதனையும்; 9:15 மணிக்கு ராஜகோபுரம், வரசித்தி விநாயகர் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலை, 6:00 மணிக்கு, மூலவர் விசேஷ அலங்காரம், தீபாராதனையும்; இரவு, 8:00 மணிக்கு, மங்கள வாத்யங்களுடன், பஞ்ச மூர்த்திகள் சிறிய மாடவீதியில் உலா வந்தனர்.