பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
மானாம்பதி: மானாம்பதி, பெரிய நாயகி சமேத வானசுந்தரேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதியில், 1,000 ஆண்டுகள் பழமையான, வானசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்திரன் பதவி இழந்த பிறகு, அவர் மனைவி வானசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சனை செய்து பூஜித்ததால் மீண்டும் பதவி கிடைத்ததாகவும், இதனால் பதவிகள் விரும்புவோர், இக்கோவிலில் வழிபட்டால் பிரார்த்தனை நிறைவேறும் என்றும் நம்பப்படுகிறது. இக்கோவில் கட்டடம் சிதிலமடைந்திருந்ததால், புனரமைப்பு பணிகள் நடந்தன. பணி நிறைவடைந்ததை அடுத்து, நேற்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு நான்கு கால யாகபூ ஜை மற்றும் மகாபூர்ணஹூதி முடிந்து, அப்பகுதியில் உள்ள கிராம தேவதை சோழியம்மன் கோவிலில் இருந்து கலசங்கள் புறப்பட்டு, காலை, 9:30 மணிக்கு ராஜ கோபுரம் மற்றும் மூலவர், அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.