பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
11:07
சென்னை: “குருவுக்கு மரியாதை செய்யும் வகையில், செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, ஆகஸ்டில் நடத்தப்படும். இதில், கர்நாடக இசை குறித்த சந்தேகங்களுக்கு மகான்கள் விளக்கமளிப்பர்,” என, கர்நாடக இசை கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் தெரிவித்தார். சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில், நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில் ஜேசுதாஸ் கூறியதாவது: குரு இல்லாமல் எதுவும் கிடையாது; குரு கடாட்சம் இருந்தால், கடல் போல ஞானம் வளரும். செம்பை வைத்தியநாத பாகவதரிடம் சில காலம் படித்தாலும், பல யுகங்கள் படித்த அனுபவம் கிடைக்கும். அவரின் அருளால் பெயர், புகழ் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, அவருக்கு குரு பூஜை செய்ய நினைக்கிறோம்.
அதற்காகவே இந்த இசை விழா நடத்தப்படுகிறது. இனி ஒவ்வொரு ஆண்டும், இவ்விழா தொடர்ந்து நடத்தப்படும். இது ஒரு சங்கீத அமைப்பி ற்கான விழா. இதில், இசை ஈடுபாடு உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். ஆக., 30, 31, செப்., 1 ஆகிய மூன்று நாட்கள், சென்னை, தி.நகர், கி ருஷ்ண கான சபாவில் இசை நிகழ்ச்சி, கர்நாடக இசை பயிற்சி பட்டறை நடத்தப்படும். இதில், மூத்த இசை கலைஞர்கள், வித்வான்கள், மகான்கள் பங்கேற்கின்றனர். வளரும் கலைஞர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், விளக்கமும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த கர்நாடக இசை கலைஞர் டி.வி.கோபாலன் கூறியதாவது: அனைத்து வித்வான்களும் நலமுடன் இருக்க பாடுபட்டவர் செம்பை வைத்தியநாத பாகவதர். அவர் பாடாத ராகங்களே இல்லை. அந்த காலத்திலேயே, 79 கிராம போன்களில் அவரது பாடல்கள் உள்ளன. பல விருதுகளுக்கு சொந் தக்காரர். என், 8வது வயதில் அவருக்கு மிருதங்கம் வாசித்த பெருமை எனக்கு உண்டு. அவரின் பிரதான சிஷ்யன் தான் ஜேசுதாஸ். அவரின் திரு வனந்தபுரம், ‘தரங்கிணிஸரி’ இசைப்பள்ளி சார்பில் இந்த இசை விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், செம்பை வைத்தியநாத பாகவதர் மகன் ஸ்ரீனிவாசன், கிருஷ்ண கான சபா செயலர் பிரபு, பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.