பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபி ஷேகம், 2002 ஜூன் 27ம் தேதி நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபி ஷேகம் நடத்த வேண்டும் என்பதால், இதற்கான திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி பாலாலயத்துடன் தொடங்கியது. ஓராண்டுக்குள் பணி முடிந்து, கும்பாபி ஷேகம் நடத்த, 27 கோடி ரூபாய் மதிப்பில் உபயதாரர்களின் பங்களிப்புடன் பணிகள் துவங்கியது. இதில் கடந்த அக்டோபர், முதல் டிசம்பர் வரை மழை மற்றும் தீப திருவிழாவினாலும் பணிகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து தேர்தல் வந்ததால் மந்த கதியில் பணிகள் நடந்தன. தற்போது, கும்பாபி ஷேக பணிகள் சுறுசுறுப்படைந்து, 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. உட்பிரகார சன்னதிகளில் வர்ணம் பூசும் பணி முடிக்கப்பட்டுள்ளது. கும்பாபி ஷேக பணிகள் விரைந்து முடிப்பது குறித்து, கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா உபயதாரர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, வரும் அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் முழுவதும் முடிக்க வேண்டும். பணி முடிந்தால்தான் தீப திருவிழா நடத்த எந்த அசவுகரியமும் ஏற்படாது. உபயதாரர்கள், ஸ்தபதி வேலை செய்வதற்கேற்ப உடனடியாக பணம் வழங்க வேண்டும். பணம் வழங்கவில்லையெனில் ஸ்தபதிகள் பணிகளில் சுணக்கம் காண்பிப்பர் என இணை ஆணையர் ஹரிப்பிரியா கூறினார். கோபுரங்களுக்கு, ஏற்கனவே அடிக்கப்பட்டுள்ள விபூதி கலர் போன்ற வர்ணம் பூசவும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. வரும் ஜனவரி மாதத்துக்குள் கும்பாபி ஷேகம் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.