பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016
12:07
திருவள்ளூர்: ஆடி கருடன் கஜேந்திர மோட்சத்தை முன்னிட்டு, நேற்று, கருட வாகனத்தில் வீரராகவர் புறப்பாடு நடைபெற்றது. நுாற்றி எட்டு திவ்யதலங்களில் ஒன்றான, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்திலும், தை பிரம்மோற்சவத்திலும், கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார். கஜேந்திரன் என்ற யானைக்கு, மோட்சம் கொடுத்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும். அப்போது, கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். நேற்று, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஹிருதாசினி குளம் அருகே, ஆடி கருடன் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி, நேற்று மாலை, கருட வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். நான்கு மாட வீதிகளிலும் கருட வாகனத்தில் உற்சவர் வலம் வந்தார். வழிநெடுக ஏராளமான பக்தர்கள் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.