பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016
12:07
ஆர்.கே.பேட்டை: ஆடி மாதம், முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி, வெள்ளாத்துாரம்மனுக்கு நேற்று பாலாபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தில், வெள்ளாத்துாரம்மன் கோவில் உள்ளது. ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுார், சொரக்காய்பேட்டை, ஆந்திர மாநிலம், புதுப்பேட்டை, ஏகாம்பரகுப்பம், நாராயணவனம் உள்ளிட்ட பகுதியில் உள்ள வெள்ளாத்துார் குல மரபினர், ஆடி மற்றும் தை மாதங்களில், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆடியில், 108 பால் குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று, ஆடி மாதம், முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதையொட்டி, சுற்றுப் பகுதிகளில் திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்தனர்.