மானாமதுரை: மானாமதுரையில் கர்நாடக இசையில் முக்கிய பங்கு வகிக்கும் ’கடம்’ தங்கம் கலந்து தங்க நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிறந்த கடம் தயாரிப்பாளர் என நிர்மல் புரொஸ்கர் விருது பெற்ற மானாமதுரை மீனாட்சியம்மாள் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக கடம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரபல கடம் வித்வான்கள் மானாமதுரையில் தான் கடம் வாங்குவது வழக்கம். ஸ்ருதி,லயம் இணைந்து ஒலிக்கும் வகையில் தயாரிக்கப்படும் கடத்திற்கு உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மவுசு உண்டு.
கடம் தயாரிப்பாளர் மீனாட்சியம்மாள் மகன் ரமேஷ் கூறுகையில்: நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 கடங்கள் வரை தயாரித்தாலும் ஸ்ருதி லயத்துடன் இணைந்த வகையில் 70 சதவிகித கடங்களே கிடைக்கும்.மேலும் புதுப்புது கருவிகள் மண்ணில் தயாரிக்க இசையமைப்பாளர்கள் விரும்புவார்கள். சாதாரணமாக கடம் தயாரித்த பின் செங்கோட்டையில் இருந்து கொண்டு வரப்படும் செம்மண் பூசி நிறம் கொண்டு வருவோம். கர்நாடக இசை நிகழ்ச்சி பலவும் இரவு நேரங்களில் தான் நடைபெறும். கடம் இசைக்கருவியில் இதுவரை மாற்றங்கள் செய்யப்படவில்லை. தற்போது இரவு நேரத்தில் ஒளிரும் வண்ணம் தங்க ரேக் பவுடர் மேல்புறம் பூசி தயாரிக்கிறோம். இந்த பொடி கிலோ ஆயிரத்து 500 ரூபாய். ஒரு பானைக்கு 100 கிராம் முதல் 250 கிராம் வரை தேவைப்படும். தற்போது இந்த புதிய தங்க கடத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது. பெரும்பாலான இசைக்கலைஞர்கள் இந்த வகை கடத்திற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர் ,என்றார்.