பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016
02:07
வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனஹள்ளி அருகே, மழைவேண்டி கால்நடைகளுடன் கிராம மக்கள் வனவாசம் சென்றனர். கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனஹள்ளி அருகே உள்ள காரகுப்பம் கிராமத்தில், 55க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்கள், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, மழைவேண்டி வனவாசம் செல்வது வழக்கம். அதன்படி நேற்று மழை வேண்டியும், கிராம மக்கள் நலனுக்காவும், மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களது கால்நடைகளுடன் வீட்டை காலி செய்து விட்டு, அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு தங்களது குல தெய்வமான கங்கம்மா தேவிக்கு சிறப்பு பூஜை செய்து, பொங்கலிட்டு வழிபட்ட கிராம மக்கள், மாலையில் வீடு திரும்பினர். வனவாசம் சென்ற நேரத்தில், மர்ம நபர்கள் யாரும் தங்களது கிராமத்திற்குள் புகுந்து விடாமல் இருக்க, தங்களது கிராமத்திற்கு செல்லும் சாலைகள் அனைத்தையும் அடைத்த மக்கள், இளைஞர்கள் சிலரை மட்டும் காவலுக்கு வைத்து விட்டு சென்றனர். இதுகுறித்து, காரகுப்பம் கிராம மக்கள் கூறுகையில், ’எங்கள் கிராமத்தில், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வனவாசம் செல்வது வழக்கம். கடந்த, ஏழு ஆண்டுகளாக வனவாசம் செல்லாததால், கிராமத்தில் துர்தேவதைகளில் நடமாட்டம் அதிகரித்ததை உணர்ந்தோம். மேலும், மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால், ஒரு நாள் வனவாசம் செல்ல முடிவு செய்து, வனவாசம் சென்றோம்’ என்றனர்.