பதிவு செய்த நாள்
21
ஜூலை
2016
12:07
பேரையூர்: பேரையூர் தாலுகா சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. மதுரை கலெக்டர் கே.வீரராகவ ராவ், விருதுநகர் கலெக்டர்(பொறுப்பு) முத்துக்குமரன், போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன், விருதுநகர் மாவட்ட வன அதிகாரி அசோக்குமார், ஏ.டி.எஸ்.பி., மாடசாமி, பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலட்சுமி, ஆர்.டி.ஓ., சுகன்யா, டி.எஸ்.பி., கோமதி, தாசில்தார் சிவக்குமார், செயல் அலுவலர் கலையரசி, பி.டி.ஓ.,க்கள் முருகன், ராஜா கலந்து கொண்டனர். திருவிழா ஜூலை 28 முதல் ஆக., 4ம் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கு வரும் பக்தர்கள் மலை மீது ஏற காலை 6.00 முதல் மாலை 4.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவர். மலை மீது செல்லும் பக்தர்கள் பாலிதீன் மற்றும் பாலிதீன் சம்பந்தப்பட்ட பொருட்களை எடுத்து செல்லக் கூடாது. அன்னதானம் வழங்குபவர்கள் வாழையிலையில் மட்டும் சாப்பாடு வழங்க வேண்டும். வாழைத்தோப்பு, தாணிப்பாறை, சங்கிலிப்பாறை, இரட்டை லிங்கம், காத்தாடி மேடு, குளிராட்டி பாறை ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்படும். ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளியிலும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். பக்தர்கள் வசதிக்காக வெளியூர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.