பதிவு செய்த நாள்
21
ஜூலை
2016
12:07
திருப்பதி: திருமலையில், மூன்று நாட்களுக்கு மேல், வாடகை அறை எடுத்து தங்கும் பக்தர்களின் விபரங்களை சேகரிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில், ஏழுமலையான் தரிசனத்துக்கு, இணையதள முன்பதிவு, 300 ரூபாய் விரைவு தரிசனம் உள்ளிட்ட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், ஒரு நாளில் தரிசனம் முடிந்து, பக்தர்கள் திரும்புகின்றனர். தர்ம தரிசனத்திற்கு வருவோர், பிற மாநிலங்களில் இருந்து வருவோர், வாடகை அறைகளில் தங்குகின்றனர். திருமலை சுற்றிய பகுதிகளை பார்க்க விரும்புவோரும், மூன்று நாட்கள் வரை தங்க வேண்டி உள்ளது. மூன்று நாட்களுக்கு மேல் அறைகளில் தங்குவோரின் விபரங்களை சேகரிக்கவும், அதற்கான காரணத்தை கண்டறியுமாறும், கண்காணிப்பு துறை, மக்கள் தொடர்பு துறைகளுக்கு, தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமலையில், பக்தர்கள் வசதிக்காக, 7,000 வாடகை அறைகள்; மூன்று தங்கும் மண்டபங்களும் உள்ளன. முடி காணிக்கை செலுத்தும் இடம் எதிரில், பக்தர்கள் தங்கும் மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. இதில், நவீன குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. முடி காணிக்கை செலுத்துதல், உடைமைகள் பாதுகாத்தல், டோக்கன் பெறுதல், உடைமைகளை திரும்பப் பெற வசதியாக, தேவஸ்தானம், கூடுதலாக பல புதிய கவுன்டர்களை அமைத்துள்ளது. இவை, நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.