பதிவு செய்த நாள்
21
ஜூலை
2016
02:07
கொடுமுடி: கொடுமுடி அருகே, புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில், ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் விட்டுச் சென்றது, பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், வெற்றிக்கோனார்பாளையத்தில், புதியதாக கட்டப்பட்டு வரும் பொன்காளியம்மன் கோவில் ஆர்ச்சில், மர்ம நபர்கள் ஐம்பொன் சிலையை வைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பொன்காளியம்மன் கோவிலில், கன்னிமார் சிலைகள் அமைப்பதற்காக, ஆர்ச் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணி இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது. இப்பணி காரணமாக, பொன்காளியம்மன் சிலை, அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, 4 மணிக்கு கோவிலுக்கு வந்த ஆறுமுகம் என்பவர், சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது, ஆர்ச்சில் காளியம்மன் ஐம்பொன்சிலை உள்ளதைக் கண்டு, கோவில் தர்மகர்த்தா சேகரிடம் தகவல் தெரிவித்தார். சேகர் கொடுமுடி போலீஸ் மற்றும் தாசில்தாருக்கு தகவல் அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர். கொடுமுடி தாசில்தார் கோவிந்தராஜ், ஐம்பொன் சிலையை கைப்பற்றினார். பின்னர் அவர் கூறியதாவது: சிலையை வைத்துவிட்டு சென்ற மர்ம நபர் யார், எதற்காக சிலையை வைத்துவிட்டு சென்றுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இச்சிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்து, நாளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.