பதிவு செய்த நாள்
22
ஜூலை
2016
12:07
ப.வேலூர்: வரும், ஆடிப்பெருக்கு நாளன்று, காவிரி கரையோர பகுதிகளில், போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. ப.வேலூர் மற்றும் காவிரிக் கரையோர பகுதிகளான ஜேடர்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி 18ம் தேதியை, ஆடிப்பெருக்கு விழா என அப்பகுதி மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம், பெண்கள் தாலி மாற்றி, புதுத்தாலி அணிந்தும், திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாகவும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை அணிவர். மாலையில் பரிசல் போட்டி நடந்து, மோட்ச தீபம் காவிரியில் விடப்படும். அதை தரிசிக்க, அப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ப.வேலூர் காவிரிக்கரைக்கு வருவர். மேலும், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சி ஆகிய, மூன்று முக்கிய விசேஷங்களும் ஒரே நாளில் வருவதால், இந்த ஆடி, 18ம் தேதி மிகவும் முக்கிய நாளாக விளங்குகிறது. அதனால், ப.வேலூர் காவிரிக்கரையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். எனவே, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டுகளை தடுக்க, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.