பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
ஊத்துக்கோட்டை: எல்லையம்மனுக்கு பக்தர்கள் கூழ் சுமந்து சென்று காணிக்கையாக வழங்கி வழிபாடு நடத்தினர். எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி கிராமத்தில் உள்ளது எல்லையம்மன் கோவில். இக்கோவில் பக்தர்கள் பங்களிப்புடன் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் அம்மனுக்கு, 11 நாட்கள் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நான்காம் ஆண்டு தீமிதி திருவிழா வரும், 31ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த, 22ம் தேதி, வெள்ளிக்கிழமை, காலை, 6:00 மணிக்கு கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள், 23ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, கிராமத்தில் உள்ள பெண்கள் தலையில் கூழ் சுமந்து கோவிலுக்கு எடுத்துச் சென்று அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.