காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு அருகில் உள்ளது பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில். இங்கு மூலவர் கிருஷ்ணர் அமர்ந்த நிலையில், விஸ்வரூபக் கோலத்தில் காட்சி தருகிறார். 26 அடி உயரம், 14 அடி அகலம் கொண்ட இந்த விக்ரஹம், சுதையினால் ஆனது. தம்மை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனனுக்கு விஸ்வரூபம் காண்பித்து தமது வல்லமையைப் புலப்படுத்தியபின், அமர்ந்த திருக்கோலம் இது என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய சுதையினால் ஆன கிருஷ்ணர் திரு விக்ரஹம் வேறு எந்தக் கோயிலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இவருக்கு வருடத்துக்கு ஒருமுறை அரிய மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலக்காப்பு மட்டுமே நடைபெறுகிறது.