பதிவு செய்த நாள்
01
ஆக
2016
11:08
ஆர்.கே. பேட்டை: வெள்ளாத்தூரம்மனுக்கு, ஆடி திருவிழாவை ஒட்டி, நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்தூர் கிராமத்தில், வெள்ளாத்தூர் மரபினரின் குலதெய்வமான வெள்ளாத்தூரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுõர், அம்மையார்குப்பம், பொதட்டூர் பேட்டை, மத்தூர், புச்சிரெட்டிபள்ளி, சொரக்காய்பேட்டை உள்ளிட்ட கிராமத்தினரும், ஆந்திர மாநிலம் புதுப்பேட்டை, சிந்தலப்பட்டடை, நாராயணவனம், கீளகரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களும் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
வெள்ளாத்தூரம்மனுக்கு, ஆடி மாதத்தில் பாலாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன் படி, நேற்று காலை, 108 பால் குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8:30 மணிக்கு, விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்து, பால் குடம் ஊர்வலம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஊர் வலம், காலை, 10:30 மணிக்கு கோவில் வளாகத்தை வந்தடைந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். திரளான பக்தர்கள் மொட்டையடித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், இரு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். இதே போல், சப்தகன்னியர் கோவிலிலும், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.