பதிவு செய்த நாள்
02
ஆக
2016
11:08
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தின் திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில ஆடிப் பெருக்கு விழா கோலாகலம். நூற்றுக்கணக்கானப் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை காவிரிக் கரையில் உற்சாகத்துடன் கொண்டாடினர். அதே போல ஆடி அமாவசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் ஆண்களும் அதிகமாக திரண்டனர்.
மங்கலம் தரும் ஆடிப்பெருக்கு, மூதாதையர்கள் அருளைப் பெற உதவும் ஆடி அமாவாசை. கோடி நன்மை தரும் குருப்பெயர்ச்சி என மூன்று முக்கிய நிகழ்வுகளும் ஒருசேர அமைந்துள்ள அதிசய திருவிழா நூறாண்டுகளுக்கு பிறகு இன்றைய தினத்தில் நடைபெறுகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் தமிழக பாரம்பரிய விழாக்களில் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று. இதனையடுத்து திருவையாறு காவிரிக்கரையில் அதிகாலை முதலே புதுமணதம்பதிகளும், குடும்பத்துடன் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் வாழை இலைப் போட்டு வெல்லமிட்ட பச்சரிசி, மஞ்சள், காதோலைக் கருகமணி, பழங்கள் வைத்து தீபமேற்றி காவிரி அன்னையை தெய்வமாக பாவித்து வழிபட்டனர். புது மணதம்பதிகள் தங்கள் திருமணத்தன்று அணிவத்த மாலைகளை காவிரியில் விட்டு வழிபட்டனர். புதுமணப்பெண்களுக்கு புதுத்தாலி கயிறு அணிவித்தனர். பெண்கள் அனைவரும் கழுத்தில் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறுகள் அணிவித்துக்கொண்டனர்.
காசிக்கு வீசம் பெரிது எனப்போற்றப்படும் தஞ்சாவூரை அடுத்த திருவையாறு புண்ணியஸ்தலம். இங்குள்ள காவிரியாற்றின் கரையில் உள்ள புஷ்ய மண்டபத்துறையில் இன்று ஆடி அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதிகொடுத்து வழிபட்டனர். புரோகிதர்களுக்கு அரிசி காய்கறிகள் கொடுத்து தானங்கள் செய்தனார் . காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதாலும், அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாய காட்சி அளிக்கும் நாளாகவும் இன்று விளங்குவதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் திருவையாறு காவிரியாற்றின் புஷ்யமண்டபத் துறையில் திரண்டனர். இதே போல வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் போன்ற ஆறுகள் வாய்க்கால்கள் செல்லும் பகுதிகள் முழுவதும் ஆடிப் பெருக்கு விழா வெகுவிமரிசையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.