திருநெல்வேலி: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் மூன்றும் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லையப்பர் கோயில்தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னோர்களை வழிபடும் தினமான ஆடி அமாவாசையையொட்டி இன்று (ஆக. 2ல்) நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி தோன்றும் பாபநாசம் சொரிமுத்தையனார் கோயில் முதற்கொண்டு தாமிரபரணி பாய்ந்தோடும் வழியெங்கும் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். முன்னோர்களுக்கு எள் இரைத்து வழிபாடுகள் செய்தனர். நெல்லை வண்ணார்பேட்டை, குறுக்குத்துறை போன்ற இடங்களில் அதிகாலையில் திரளான மக்கள் குழுமினர். ஆக.2ம் தேதி இன்னொரு முக்கிய தினம் ஆடிப்பதினெட்டாகும். ஆடி மாதத்தின் 18ம் தேதியையொட்டி, இன்றைய தினத்தில் பெண்கள் தங்களின் தாலிகளை பிரித்து புதுத்தாலி அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் நடந்த நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
குருப்பெயர்ச்சி: குருபகவான், சிம்மராசியில் இருந்து கன்னிராசிக்கு இடம்பெயர்ந்தார். இதையொட்டிநெல்லையப்பர் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.