பதிவு செய்த நாள்
05
ஆக
2016
11:08
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வைணவ கோவில்கள் உள்ளிட்ட பல கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு, விளக்கு பூஜை என சிறப்பு வழிபாடு இன்று நடத்தப்படுகிறது. அம்மனுக்கு மிகவும் விசேஷமான மாதம், ஆடி. இம்மாதமே தட்சிணாயனத்தின் தொடக்கம். அதாவது, இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரிய பகவான், தெற்கு நோக்கி பயணத்தைத் தொடங்கும் மாதம். அம்பாளுக்கு உரிய இந்நாளில் சித்தர்களும், யோகிகளும் தங்களது தவத்தை துவக்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆண்டாள், ஆடி மாதம், பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள துளசி தோட்டத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் அவதார நாளே ஆடிப்பூரம் ஆகும். ஆடிப்பூரமான இன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, அம்பாளுக்கு வளையல் காப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாள் ஆடிப் பூரம். பல கோவில்களில் அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு, அந்த வளையல்கள் பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. ஆடிப் பூரத்தன்று, அம்பாளுக்கு சித்ரான்னங்களும், கூழும் படைப்பதும் வழக்கத்தில் உள்ளது. திருமணமாகாத பெண்கள், இந்நாளில் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் கைகூடும் என்ற ஐதீகமும் உள்ளது. ஆடிப்பூர விழா, பல கோவில்களில் வாகன சேவையுடன், 10 நாள் பிரம்மோற்சவமாகவும் நடத்தப்படுகிறது. ஆடிப்பூரமான இன்று பல கோவில்களில் அம்பாளுக்கு மலர், காய்கனி, நகை, மஞ்சள், சந்தனம், குங்குமம் இதுபோன்று பல அலங்காரங்கள் நடத்தப்படுகிறது. - நமது நிருபர் -