பதிவு செய்த நாள்
05
ஆக
2016
11:08
கோபி: கோபி அருகே உள்ள கோவிலில், 3,000 ஆடுகள் வெட்டப்பட்டு, மெகா கறி விருந்து நடந்தது. இதில், 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, சின்னக்கோசணத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூதநாச்சியம்மன் நாட்ராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி பொங்கல் திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கோலாகலமாக நடக்கும். நடப்பாண்டு திருவிழா, கடந்த, 1ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பொது விருந்து நேற்று நடந்தது. நேர்த்திக் கடனாக வேண்டியிருந்த பக்தர்கள் சார்பில், 3,000 ஆடுகள் வெட்டப்பட்டன. அரை ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் அமைத்து, 50க்கும் மேற்பட்ட ராட்சத அண்டாக்களில், ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது. சமையலுக்கு, 100 மூட்டை அரிசி, 3.5 டன் சிறிய வெங்காயம், 250 கிலோ வத்தல், 30 கிலோ மிளகு, ஒன்றரை மூட்டை மல்லி பயன்படுத்தப்பட்டது. 30 டன் விறகுகள் பயன்படுத்தப்பட்டன. பக்தர்கள் சாப்பிடுவதற்கு, ஒரு லட்சம் பாக்குமட்டை தட்டுகள், ஒரு லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டன. சமையல் பணியிலும், கறியை வெட்டி தயார் செய்யும் பணியிலும், 120க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாக கறி விருந்து வழங்கப்பட்டது. சாப்பிட்ட தட்டுகளை போடுவதற்காக கோவில் வளாகத்தில், பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. சாப்பாட்டை வீட்டுக்கு எடுத்து செல்ல அனுமதியில்லை. காலை, 9:00 மணிக்கு தொடங்கிய கறி விருந்து, இரவு வரை, நீடித்தது. இதில், சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர். மெகா விருந்தால், சின்னக்கோசணம் பகுதியே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.