பதிவு செய்த நாள்
05
ஆக
2016
11:08
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக, சீட்டணஞ்சேரி என்ற குக்கிராமத்தில் அமைந்துள்ள காலீஸ்வரர் கோவில் விளங்குகிறது. வெகு காலத்திற்கு முன், இப்பகுதியில் சாத்தண்ணன், சீட்டண்ணன், குரும்பண்ணன் என்ற மூன்று சகோதரர்கள் பசுக்களுடன் வசித்துள்ளனர். அவர்கள் நினைவாக இப்பகுதிகள் சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி என, பெயர் பெற்றுள்ளது. காஞ்சிபுரத்திற்கு கிழக்கே, 25 கி.மீ.,யில், பாலாற்றங்கரையின் தென்புறத்தில் உள்ள இந்த கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள காலீஸ்வரர் கோவில், சுற்று வட்டாரத்தில் புகழ்பெற்ற தலம்.
கோவில் பெயர் காரணம்: இப்பகுதியில், வெகு காலத்திற்கு முன் புதர்களாலும், முட்செடியாலும் மறைந்து போய் இருந்த சிவலிங்கத்தை கறவை பசு கண்டறிந்து, தன் மடியில் இருந்து பாலை சிவலிங்கம் மீது பொழிந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து, பசு கூட்டங்கள் தானாக வந்து, லிங்கத்தின் மீது பால் பொழிந்ததை அப்பகுதியினர் கண்டுள்ளனர். இந்த சிவலிங்கத்தை பசுக்கள் பூசித்ததால், காலீ என பொருள்படும் பசுவின் பெயரில், காலீஸ்வரர் என பெயர் பெற்று, இறைவன் காலீஸ்வரர் எனவும், இறைவி சிவகாமி சுந்தரி எனவும் எழுந்தருளி இப்பகுதியில் அருள்பாலிக்கின்றனர்.
சிறப்பின் காரணம்: ஸ்ரீகிருஷ்ணபகவான் துவாரகையில் அரசாட்சி செய்தபோது இத்தலத்திற்கு வந்து வழிபட்டு சிவன் அருளை பெற்றார். இந்த கிராமத்திற்கு கிருஷ்ணபுரி என்றொரு பெயர் உண்டென்றும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. மேலும், வியாச முனிவரின் உபதேசம் பெற்று பாண்டவர்கள் இக்கோவிலில் வழிபட்டு முன்வினை பாவங்கள் நீங்க பெற்றதாகவும், சிவ பெருமானின் கட்டளைக்கு கீழ்படிந்து, குமர கடவுள் குமார தீர்த்தம் எனும் குளத்தை இங்கு உருவாக்கினார்.
அந்த தீர்த்தத்தின் மூலம் சுயம்புலிங்க மூர்த்தியை அபிஷேகம் செய்து சூரனை வதைத்து பாவம் நீங்க பெற்றுள்ளதாகவும் பல வரலாறுகள் இந்த கோவிலுக்கு உள்ளன. இதனால், இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் பாவங்கள் நீங்கி புனிதம் அடையலாம் என்பது ஐதீகமாக உள்ளது. கோவில் அமைப்பு:இக்கோவிலில், இறைவனுக்கும், இறைவிக்கும் தனி, தனியாக கொடி மரங்கள் உள்ளன. மேலும், ராஜ கோபுரம் (ஐந்து நிலைகள்), ரிஷி கோபுரம் (மூன்று நிலைகள்) என, இரண்டு பெரிய கோபுரங்களும், ஆறு சிறிய கோபுரங்களும் உள்ளன. கோவில் விஷேசங்களுக்கு தனி, தனியாக மண்டபங்களும், தனியாக யாகசாலைகளும், 1 ஏக்கர் பரப்பில் அழகான குளமும் உள்ளது.
இக்கோவிலில் உற்சவ விழா காலங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவிற்கு வருகின்றனர். பக்தர்கள் வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லை. எனவே, இப்பகுதியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விஸ்வலிங்கம், சீட்டணஞ்சேரி இக்கோவிலின் உள் பகுதியில், 1 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. இக்குளத்திற்கான நீர்வரத்து கால்வாய் பராமரிப்பின்றி துார்ந்துள்ளதால், மழை நேரங்களிலும் குளம் முழுமையாக நிரம்புவதில்லை. எனவே, குளத்தை துார் வாரி, நீர்வரத்து கால்வாய்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுவன், சீட்டணஞ்சேரி மழைக்கு முன் இரட்டை கால்வாயை துார் வாரி, குறுகிய இடங்களை விரிவுபடுத்தி, சிறுபாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த பணி துவங்கும். நகராட்சி அதிகாரி ஒருவர் -