பதிவு செய்த நாள்
08
ஆக
2016
12:08
ஆர்.கே.பேட்டை:ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில், கோலாகல திருவிழா நடக்கும். வரும், 12ம் தேதி, ஆடி வெள்ளியில், வரலட்சுமி விரதமும் சேர்ந்து வருவதால், பெண்கள் இப்போதே பக்தி பரவசத்தில் மூழ்கியுள்ளனர்.
12ம் தேதி...: ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு, முந்தைய வெள்ளிக்கிழமையில், வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆவணி 2ம் தேதி (ஆக., 18) பவுர்ணமி என்பதால், வரும், 12ம் தேதி, ஆடி வெள்ளியில், வரலட்சுமி விரதம் அமைகிறது. ஏற்கனவே, ஆடி மாதத்தை ஒட்டி, அம்மன் கோவில்களில், உற்சவங்கள் களைகட்டியுள்ளன. 12ம் தேதியும், பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. அதே நாளில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்பட உள்ளதால், பெண்களிடம் இப்போதே உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.
பட்டியலிடும் பெண்கள்: விரதம் அனுஷ்டிப்பதற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை தங்கள் வீட்டு பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதுமாக உள்ளனர். பூஜைக்கான மங்கல பொருட்களை பட்டியலிட்டு வருகின்றனர்.