திருவடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் ஆடிப்பூரத்திருவிழா, ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 4ம் தேதி தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை 11 மணிக்கு ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் மணமகன் கோலத்தில் காட்சியளித்தார். சிநேகவல்லிதாயார் பூக்களால் அலங்கரிக்கபட்டு மணமகள் கோலத்தில் காட்சியளித்தார். 11.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்பு சிறப்பு தீப, ஆராதனைகள், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன், செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு மதியம் கோயிலில் அன்னதானமும், இரவில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடந்தது.