பதிவு செய்த நாள்
09
ஆக
2016
12:08
எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சி, சென்னை, மீனம்பாக்கம், ஜெயின் கல்லுாரியில், 2ம் தேதி துவங்கியது. கண்காட்சியின் கடைசி நாளான நேற்று, வனம், வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், விருஷ்ச வந்தனம், நாக வந்தனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி, துணைத் தலைவர் ராஜலட்சுமி, டி.வி.எஸ்., நிறுவன அதிபர் கோபால் ஸ்ரீனிவாசன், ஜி.எம்.ஆர்., குழுமங்களின் அதிபர் பி.வி.என்.ராவ், டால்மியா சிமென்ட் அதிபர் புனித் டால்மியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரு கோடி மரங்கள் : மூலிகை மருத்துவர் வாணியம்பாடி அக்பர் கவுசர், குடும்பத்துடன் கண்காட்சியை பார்வையிட்டார். பின், அவர் எழுதிய, இந்து கோவில் மரங்களின் மருத்துவ குணங்கள் என்ற, 887 பக்க நுாலை, ஆடிட்டர் குருமூர்த்திக்கு வழங்கினார். இதையடுத்து, வட மாநிலங்களில் அதிகம் காணப்படும் வன்னி மரங்கள், மிகவும் மருத்துவ குணம் கொண்டவை. எனவே, இந்து அமைப்புகள் மூலம் தமிழகத்தில், ஒரு கோடி வன்னி மரங்களை நடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதேபோல, ஒவ்வொரு கோவிலுக்கும், ஒரு தல விருட்சம் உள்ளது; அவற்றை அதிகம் நட ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.
பாரம்பரிய விளையாட்டு : கண்காட்சியை முன்னிட்டு, 1,079 பாரம்பரிய விளையாட்டு, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 350 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 1.20 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 30 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியின் இறுதி நிகழ்ச்சியாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு, கீழ்பென்னாத்துார் அருகில் உள்ள செவரப்பூண்டி காமாட்சி அம்மன் நாடகக் குழு நடத்திய, வன்னியர் புராணம் தெருக்கூத்து நடந்தது. எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சியை, ஆறு நாட்களில், 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். - நமது நிருபர் -