பதிவு செய்த நாள்
20
ஆக
2016
10:08
ஸ்ரீநகர்: அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அமர்நாத் குகையில், ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில், பனிலிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும், நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு, அமர்நாத் யாத்திரை, கடந்த மாதம், 2ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவு பெற்றது; 2.20 லட்சம் பக்தர்கள், பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு யாத்திரையின் போது, 21 யாத்ரீகர்கள் உட்பட, 29 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர். மேலும், 40 யாத்ரீகர்கள் உட்பட, 50 பேர், நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்தனர். கடந்த மாதம், 24ம் தேதி வரை, இரண்டு லட்சம் பக்தர்கள், பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
பயங்கரவாதி பர்ஹான் வானி, ’என்கவுன்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கர கலவரம் வெடித்தது. இதனால், கடந்த, 25 நாட்களில், 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே, பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். கடந்த, 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் எண்ணிக்கை, இந்த ஆண்டு, மிகவும் குறைவு. அமர்நாத் யாத்திரை முடிவடைந்ததை குறிக்கும் வகையில், ’சாரி முபாரக்’ என்கிற, சிவனின் திரிசூலத்தை, துறவிகள், நேற்று முன்தினம் காலை, குகை கோவிலுக்கு எடுத்து வந்தனர், இதைத் தொடர்ந்து, சிறப்புவழிபாடுகள் நடத்தப்பட்டன.
குறைந்து வரும் பக்தர்கள் : அமர்நாத் பனிலிங்கத்தை, கடந்த, 2011ம் ஆண்டு, 6.36 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 2012ல், 6.22 லட்சம்; 2013ல், 3.53 லட்சம்; 2014ல், 3.72 லட்சம்; 2015ல், 3.52 லட்சம் பக்தர்கள், அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்தனர்.