பதிவு செய்த நாள்
24
ஆக
2016
12:08
செஞ்சி: செஞ்சி அருகே, 8ம் நுாற்றாண்டை சேர்ந்த கானமர் செல்வி கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காசியல் கழக நிறுவனர் லெனின், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த அண்ணமங்கலம் கிராமத்தில், அதே பகுதியை சேர்ந்த தலைமையாசிரியர் முனுசாமி துணையுடன் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள குளக்கரையில் பல்லவர் கால கானமர் செல்வி (விஷ்ணு துர்கை) கல் சிற்பத்தை கண்டு பிடித்தார். ஆய்வாளர் லெனின் கூறியதாவது: அண்ணமங்கலம் கிராமத்தில் அழிந்த நிலையில் உள்ள சோழர்கால கோவில் குளக்கரையில், மரத் தின் அடியில் 117 செ.மீ., உயரம், 83 செ.மீ., அகலம், 10 செ.மீ., கனமும் கொண்ட கல் பலகையில், கானமர் செல்வி புடைப்பு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம், சமபங்க நிலையில் நிமிர்ந்து நேராக உள்ளது. தலைமுடியை மூன்று அடுக்குகளாக அலங்கரித்து, கிரீட மகுடமாக வடித்துள்ளனர். காதுகளில் தடித்த, வட்டமான பத்ர குண்டலங்கள் (ஓலைக்குழை) உள்ளன.
கழுத்தில் வேலைப்பாடுகளுடன் கூடிய அணியும், மார்பகங்களுக்கு மெல்லிய கச்சையும் காட்டப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடைய கானமர் செல்வியின் சிற்பத்தில், மேலிரண்டு கைகளில் வலது கையில் பிரயோக சக்கரத்தையும், இடது கையில் சங்கையும் தாங்கியுள்ளார். கீழ் வலது கையில் அபயஹஸ்தமும், இடது கை இடதுபுற இடையில் வைத்தவண்ணம் சிற்பம் உள்ளது. மேல்கரங்களில் கங்கணம் என்ற தோள் வளையும், முன் கையில் கை வளையும், கால்களில் தண்டையும் உள்ளன. இடையில் கச்சையும், முன்புறம் இடைவாகும், இரு பக்கமும் ஆடை கட்டும் காணப்படுகின்றன. கால்களின் இடதுபுறம் மேடை மீது செல்வியின் வாகனமாக நீண்ட கொம்புகளுடன், அலங்கரிக்கப்பட்ட ஆமான் உருவம் உள்ளது. வலது காலின் அருகே, வீரன் ஒருவன் கையில் குறுவாள் கொண்டு தனது இடது கையை கிழித்து, வெற்றியின் காணிக்கையாக ரத்தத்தை படையலாக்கும் காட்சி உள்ளது.இத்தகு அமைப்புகளின் மூலம், 8ம் நுாற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பம் என தெரிய வருகிறது. இவ்வாறு ஆய்வாளர் லெனின் கூறினார்.