மூலவர் அம்பாளே உற்ஸவராகவும் வழிபடப்பெறும் தலம் காரைக்குடி, கொப்புடையம்மன் கோயில். வடக்கு நோக்கி அம்பாள், ஈசனை பூஜை செய்யும் சன்னிதி உள்ள தலம் தக்கோலம். கிடந்த கோலத்தில் துர்கை அருள்பாலிக்கும் தலம் திருநெல்வேலி மாவட்டம், பராஞ்சேரி அருகில் உள்ள செழியநல்லூர். இங்கே பள்ளிகொண்ட கோலத்தில் துர்கை தரிசனம் தருகிறாள். துர்கைக்கென்று தனிக்கோயில் மயிலாடு துறையை அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது. அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்ஸவ மூர்த்தம் திருமால்பூரில் உள்ளது. பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை அருள்பாலிக்கும் தலம் திருவெண்காடு.
திருவானைக்கா, திரு ஆமாத்தூர் போன்ற தலங்களில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளன. திருநாகேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் அம்பிகைக்கு, திருமகளும், கலைமகளும் பணி செய்யும் கோலத்தில் காட்சி தருகின்றனர். கொல்லூர் மூகாம்பிகையே, அதிகாலை மூன்றரை முதல் 7 மணி வரை சோட்டாணிக்கரை பகவதியாக அருள்பாலிப்பதாக ஐதீகம். அமர்ந்த கோலத்தில் எட்டுத் திருக்கரங்களுடன் அமைந்த துர்கையை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்.