பதிவு செய்த நாள்
29
ஆக
2016
12:08
பழநி: பழநி மலைக்கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பழநி, ஞான தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. ஆனால், நுாற்றுக்குமேற்பட்ட காலிப்பணியிடங்கள் பல ஆண்டுளாக நிரப்படவில்லை. இதனால் அலுவலர்களுக்கு பணிச்சுமை கூடியுள்ளது.
கடந்த, 2009 மற்றும் 2011ல் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, நேர்காணலும் நடந்து உள்ளது. இருப்பினும் நிர்வாக, பணிவரன் முறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டிய தனியார் செக்யூரிட்டிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இவர்கள் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்கள், கட்டணசீட்டு, அர்ச்சனை, தரிசன சீட்டுகளை வினியோகம் செய்கின்றனர். பணப்புழக்கம் உள்ள இடங்களில் தனியார் செக்யூரிட்டிகளை பயன்படுத்துவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும், மலைக்கோயில் அதன் உபகோயில் மற்றும் அலுவலகப்பணிகளுக்காக கூடுதல் நேரம் பணியாளர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது. வேலைப்பளுவால் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பழநி மலைக்கோயிலில் காலியாக உள்ள துணை ஆணையர், அலுவலக உதவியாளர், கண்காணிப்பாளர்கள், ஓதுவார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.