பதிவு செய்த நாள்
29
ஆக
2016
12:08
மதுரை: ஆலயத் துாய்மை; ஆண்டவனுக்கான சேவை, என்பதை மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கோயில் வளாகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் அமைப்பு. தமிழ்நாடு சுற்றுச்சுழல் துறை சார்பில் இந்தாண்டு இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட 11 கோயில்களில் கோயில் துாய்மை, பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு, புராதன சின்னங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கிரீன் டிரஸ்ட் சார்பில் கலை நிகழ்ச்சிகள், தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் கோடாங்கி கலைக் குழுவினரின் தெரு நாடகம், கரகாட்டம் பக்தர்களை சொக்க வைத்தது. குளங்களை சீரமையுங்க மக்களே, உங்க அடுத்த தலைமுறைக்கு குடி தண்ணீர் கிடைக்கும்; காய்கறிகள் வாங்க துணிப் பையோட போங்க; கடையில் கண்ணாடி டம்ளரில் டீ குடிங்க; பாலிதீனுக்கு குட்பை சொல்லுங்க... போன்ற கருத்துக்களை கொண்ட நாட்டுப்புற பாடல்களை கேட்ட பக்தர்கள் மெய் மறந்து ரசித்தனர்.
கிரீன் டிரஸ்ட் நிறுவனர் குழந்தைவேலு கூறுகையில், "பிரபலமான கோயில்களில் முதற்கட்டமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பக்தர்களுக்கு துணிப் பை வழங்கப்பட்டது. சித்திரை வீதிகளில் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி நடத்தப்படவுள்ளது. அடுத்தகட்டமாக ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயிலில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்," என்றார். அரசு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் கோடாங்கி கலை குழு நிர்வாகி உமாராணி கூறியதாவது எங்கள் குழுவில் 11 பேர் உள்ளோம். மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 15 ஆண்டுகளாக அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கல்வித்துறையில் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் இடைநிற்றலை தவிர்க்க, 25 சதவீதம் மாணவர் சேர்ப்பு நிகழ்ச்சி என இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். நல்ல விஷயங்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறோம், என்றார்.