பதிவு செய்த நாள்
30
ஆக
2016
12:08
உடுமலை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில், 501 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னணி நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் உடுமலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில், 501 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீர்மானிக்கப்பட்டது. உடுமலை நகரம், எரிசனம்பட்டி, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய இடங்களில் விசர்ஜன ஊர்வலங்கள் நடத்துவது, வரும் செப்டம்பர் 24, 25 தேதிகளில் திருப்பூரில் நடக்கும் மாநில பொதுக்குழுவுக்கு, நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொள்வது, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட் ஆப் பாரிஸ் சிலைகள், உடுமலை பகுதிகளில் பிரதிஷ்டை செய்வதை அரசு அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் வீரப்பன், பாலாஜி, பொன் செந்தில்குமார், சதீஷ்குமார், மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பபீஸ் நன்றி கூறினார்.